ஐரோப்பாவில் புகை குண்டுகளை வீசி எதிர்க்கட்சியினர் தாக்குதல்

ஐரோப்பாவில் செர்பியா நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் குண்டுகள், புகைகுண்டுகளை வீசியதால் 3 எம்பிக்கள் காயமடைந்தனர்.

மார்ச் 04 ஆம் திகதி கூடிய மக்களவை கூட்டத்தின்போது சேர்பியன் ப்ராக்ரசிவ் கட்சி தலைமயிலான ஆளும் கூட்டணி (SNS) யை எதிர்த்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழகங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது. ஆனால் இந்த அவை சட்டவிரோதமானது என்றும் அந்நாட்டு பிரதமர் மிலோஸ் உசெவிகின் ராஜினாமாவை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் எதிர் கட்சி எம்பிக்கள் சிலர் தங்களது இருக்கைகளை விட்டு இறங்கி மக்களவை சபாநாயகரை நோக்கி ஓடினர். அவர்களுக்கும் அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையே மற்ற சில எதிர்கட்சி உறுப்பினர்கள் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற புகைக்குண்டுகளை மக்களவைக்குள் வீசி, அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சுமார் 3 எம்பிக்கள் காயமடைந்துள்ளனர் என்றும் ஆளுங்கட்சி உறுப்பினரான ஜாஸ்மினா ஒப்ராடோவிக் என்பவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன் ரெயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 15 பேர் பலியான விபத்தின் பின்னணியில் உள்ள ஊழலை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டு பிரதமர் உசெவிக் தனது பதவியை ராஜிநாமா செய்தார். ஆனால் அவரது ராஜிநாமா மக்களவையில் உறுதி செய்யப்படாமல் மற்ற வேலைகளில் ஈடுபட்டதினால் எதிர் கட்சியினர் தற்போது அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

Bootstrap